வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் பலி...வரலாற்றில் துக்கம் நிறைந்ததாக மாறிவிட்டது - விராட் கோலி வேதனை


வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் பலி...வரலாற்றில் துக்கம் நிறைந்ததாக மாறிவிட்டது - விராட் கோலி வேதனை
x
தினத்தந்தி 4 Sept 2025 6:46 AM IST (Updated: 4 Sept 2025 6:49 AM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும், காயமடைந்த ரசிகர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து வருகிறேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்

பெங்களூரு,

18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் நீண்ட கால ஏக்கம் தீர்ந்தது.இதனை கொண்டாட அணியின் வெற்றி கொண்டாட்டம், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த ஜூன் 4-ந் தேதி நடந்தது..

பெங்களூரு அணியை வரவேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஸ்டேடியத்தின் சுவர்கள் மற்றும் வேலிகளில் ரசிகர்கள் ஏறிச் செல்ல தொடங்கினர்.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினார். 50 மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது .

இந்த நிலையில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த சம்பவம் குறித்து முதல் முறையாக பேசி இருக்கிறார். அவர் பெங்களூரு அணியின் ‘எக்ஸ்’ தள பதிவில், ‘ஜூன் 4-ந்தேதி போன்ற இதயத்தை நொறுக்கும் ஒரு துயரத்துக்கு வாழ்க்கையில் உங்களை எதுவும் தயார்படுத்தாது. எங்களது அணியின் வரலாற்றில் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டிய அந்த நாள், துக்கம் நிறைந்ததாக மாறிவிட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காகவும், காயமடைந்த ரசிகர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து வருகிறேன். உங்களது இழப்பு எங்களது கதையின் ஒரு அங்கமாகி விட்டது. நாம் அக்கறையுடனும், மரியாதையுடனும், பொறுப்புடனும் ஒன்றாக முன்னோக்கி செல்வோம்’ என்று கூறியுள்ளார்.

அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் கூறுகையில், ‘பெங்களூரு அணிக்காக ஒவ்வொரு முறையும் மிகவும் ஆர்வமுடன் களம் இறங்கி விளையாடினேன். அந்த அதீத ஆர்வம் உங்களிடம் (ரசிகர்கள்) இருந்து வந்தவையாகும். அன்பு, நம்பிக்கை, அசைக்க முடியாத ஆதரவால், நீங்கள் எப்போதும் எங்களுடன் நின்றிருக்கிறீர்கள். அதே போல் நாங்களும் உங்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் எனது எண்ணங்களிலும், பிரார்த்தனைகளிலும் இருக்கிறீர்கள். நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து, மீண்டும் நமது பலத்தை பெறுவோம்’ என்றார்.

1 More update

Next Story