இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரபடா விளையாடுவாரா..? பயிற்சியாளர் பதில்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது.
கவுகாத்தி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி கவுகாத்தியில் நாளை தொடங்க உள்ளது. தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. மறுபுறம் இந்த போட்டியில் வெற்றி பெற்று, இந்திய மண்ணில் தொடரை வெல்ல தென் ஆப்பிரிக்க அணி முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக முதல் போட்டியிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரபடா விலகினார். அவர் இல்லாமலேயே தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் எதிர் வரும் 2-வது போட்டியில் ரபடா விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பீட் போத்தா பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் கசிசோ ரபடாவை கண்காணித்து வருகிறோம். 2-வது டெஸ்டில் அவர் ஆடுவாரா ? என்பதை அடுத்த 24 மணி நேரத்தில் முடிவு செய்வோம்” என்று கூறினார்.






