3-வது டி20: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை

3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசல் பெரேரா, கமில் மிஷரா நிலைத்து ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர்.
ஹராரே,
இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் ஆட்டத்தில் இலங்கையும், 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வேவும் வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மருமணி 51 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக துஷான் ஹேமந்தா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பதும் நிசங்கா - குசல் மெண்டிஸ் சிறப்பாக தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிசங்கா 33 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசல் பெரேரா, கமில் மிஷரா நிலைத்து ஆடி அணியை வெற்றி பெற வைத்தனர். 17.4 ஓவர்களில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கமில் மிஷரா 73 ரன்களுடனும், குசல் பெரேரா 46 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பேட்ஸ்மேன் கமில் மிஷரா ஆட்டநாயகன் விருதையும், பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா தொடர்நாயகன் விருதையும் வென்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.






