ஆண்டர்சன்-தெண்டுல்கர் டிராபி: கருண் நாயருக்கு 10-க்கு 4 மார்க்.. சாய் சுதர்சனுக்கு.. - இந்திய முன்னாள் வீரர்

இங்கிலாந்து - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.
மும்பை,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடரில் 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பெற்ற கருண் நாயர் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. 4 போட்டிகளில் விளையாடி வெறும் 205 ரன்கள் மட்டுமே அடித்தார். உள்ளூர் தொடர்களில் அபாரமாக விளையாடிய அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இரட்டை சதத்தை அடித்தார். ஆனால் இந்த தொடரில் ஜொலிக்க தவறிவிட்டார். இதனால் இந்திய அணியில் அவரது வாய்ப்பு முடிந்து விட்டதாக பலரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரில் கருண் நாயரின் செயல்பாடுகளுக்கு 10-க்கு 4 மதிப்பெண் கொடுக்கலாம் என்று இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். அதேவேளை சாய் சுதர்சனின் செயல்பாடுகளுக்கு 5 மதிப்பெண் கொடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “தொடர் முழுவதும் அவர் (கருண் நாயர்) மோசமாகத் தெரியவில்லை. அவர் தொடர்ந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து வந்தார், ஆனால் ஒரே ஒரு அரைசதத்தை மட்டுமே அடித்தார். அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. கிரிக்கெட் நிச்சயமாக அவருக்கு இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்தது, ஆனால் அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார். குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்டில், இந்தியாவுக்காகப் போட்டியை வெல்ல அவருக்கு ஒரு உண்மையான வாய்ப்பு இருந்தது. ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. அவர் அடிக்கடி நன்றாக விளையாடுவது போல் தோன்றியது. ஆனால் திடீரென்று தவறான ஷாட் அடித்து ஆட்டமிழந்தார். அதனால் அவருக்கு 4 மதிப்பெண் மட்டுமே கொடுப்பேன்.
சாய் சுதர்சன் திறமையானவர். அவர் தனது விளையாட்டின் சில அம்சங்களில் உழைத்தால் அவர் பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர் எல்லா ஆட்டங்களிலும் விளையாடியிருந்தால், விஷயங்கள் வித்தியாசமாக இருந்திருக்கலாம். அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தால், அவரால் நிறைய சாதிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். கடைசிப் போட்டியில், அவர் அரைசதம் அடித்தார். நான் அவருக்கு பத்தில் 5 மதிப்பெண்கள் கொடுப்பேன்” என்று கூறினார்.






