ஆஷஸ் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்.. வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 177 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஷஸ் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்.. வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா
Published on

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்களில் 334 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 138 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 73 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 378 ரன்கள் குவித்து, 44 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அலெக்ஸ் கேரி 46 ரன்களுடனும், மைக்கேல் நேசர் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர்.

இந்த சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 117.3 ஓவர்களில் 511 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை விட 177 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் (77 ரன்), ஜேக் வெதரால்ட் (72 ரன்), லபுஸ்சேன் (65 ரன்), அலெக்ஸ் கேரி (63 ரன்) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (61 ரன்) ஆகிய 5 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகளும், ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 177 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி - பென் டக்கெட் களமிறங்கினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட இந்த ஜோடி 48 ரன்கள் (7.4 ஓவர்கள்) அடித்த நிலையில் பிரிந்தது. பென் டக்கெட் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆலி போப் களமிறங்கினார்.

போப் - கிராலி கூட்டணியும் ஒரளவு நன்றாக ஆடி ரன் அடித்தது. இதனால் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி பெரிய அளவில் ரன் குவிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இவர்கள் ஆட்டமிழந்ததும் இங்கிலாந்து அணி தடுமாறியது. ஜாக் கிராலி 44 ரன்களிலும், போப் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் ஜோ ரூட் (15 ரன்), ஹாரி புரூக் (15 ரன்), ஜேமி ஸ்மித் (4 ரன்) ஆகியோர் ஏமாற்றினர்.

இதனால் இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்தது. 3-வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 35 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களுடன் தடுமாறி வருகிறது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 ரன்களுடனும், வில் ஜாக்ஸ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், போலண்ட் மற்றும் மைக்கேல் நெசர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

இங்கிலாந்து இன்னும் 43 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. இதனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com