ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவை வீழ்த்த பாக்.அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

நடப்பு ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
லாகூர்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. முன்னதாக நடப்பு தொடரில் இவ்விரு அணிகள் லீக் மற்றும் சூப்பர்4 சுற்றில் சந்தித்த ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே இறுதிப்போட்டியில் இந்தியாவை எப்படியாவது தோற்கடித்து கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மனநிலையுடன் பாகிஸ்தான் ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டின் முன்னாள் வீரரான சோயப் அக்தர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “இந்த மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். இந்தியாவின் ஒளியை தள்ளி வைத்து விட்டு தற்போதைய மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். இந்தியாவின் ஒளியை உடையுங்கள். வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் நீங்கள் கொண்டிருந்த மனநிலையுடன் விளையாடுங்கள். இதுதான் உங்களுக்கு தேவையான மனநிலை. நீங்கள் 20 ஓவர்கள் வீச வேண்டிய அவசியமில்லை; உங்களுக்கு எதிரணியின் விக்கெட்டுகள் மட்டுமே தேவை.
என் வார்த்தைகளை கவனியுங்கள். முதல் இரண்டு ஓவர்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தால், அவர்கள் சிக்கலில் மாட்டுவார்கள். அபிஷேக் சர்மா ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தால், அவர்கள் தடுமாறுவார்கள். அபிஷேக் பந்தை தவறாக அடிக்க மாட்டார் என்று இல்லை நீங்கள் அவரை வீழ்த்த வேண்டும். நீங்கள் போராடும் மனநிலையுடன் வந்தால், இந்தியா தங்கள் ரன்களுக்கு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை உணருவார்கள்.
நான் கவுதம் கம்பீரை அறிவேன். அவர் தனது அணியிடம், 'பாகிஸ்தானுக்கு எதிராக உங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்' என்று கூறுவார். பாகிஸ்தான் மோசமான கிரிக்கெட் விளையாடலாம், மோசமான அணியை தேர்வு செய்யலாம், ஆனால் இறுதிப்போட்டிக்கு வந்தவுடன், தங்களது சிறந்த கிரிக்கெட்டை விளையாடி கோப்பையை வெல்வார்கள். இது எங்களுக்கு பலமுறை நடந்திருக்கிறது” என்று கூறினார்.






