ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: வெற்றி வாய்ப்பு யாருக்கு..? பாக்.முன்னாள் வீரர் கணிப்பு


ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: வெற்றி வாய்ப்பு யாருக்கு..? பாக்.முன்னாள் வீரர் கணிப்பு
x

image courtesy:twitter/@ACCMedia1

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

லாகூர்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. 41 ஆண்டு கால ஆசிய கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

நடப்பு தொடரில் ஏற்கனவே லீக்கில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சூப்பர்4 சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் பாகிஸ்தானை புரட்டியெடுத்து இருப்பதால் இந்திய அணியினர் கூடுதல் உத்வேகத்துடன் களம் காணுவார்கள். தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி 9-வது முறையாக கோப்பையை கையில் ஏந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மறுபுறம் நடப்பு தொடரில் இந்தியாவுடன் 2 முறை உதை வாங்கி இருப்பதாலும், கைகுலுக்காததால் உருவான களேபரம், சமீபகாலங்களில் இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் நிகரான அணியாக பாகிஸ்தான் இல்லை போன்ற விமர்சனங்களாலும் அந்த அணியினர் மனதுக்குள் கொந்தளித்து போய் இருக்கின்றனர். அந்த உக்கிரத்துடன் முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் களத்தில் அனல் பறக்கப்போகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடக்கும் இந்த யுத்தத்தில் நெருக்கடியை திறம்பட கையாளும் அணியின் கையே ஓங்கும்.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இது ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டி. எனவே நிச்சயமாக இந்தியாதான் வெற்றி பெற வாய்ப்புள்ள அணி. ஆனால், நீங்கள் பார்த்திருப்பீர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள், நானும் பார்த்திருக்கிறேன், இந்த பார்மட்டில் எதுவும் நடக்கலாம். ஒரு நல்ல பேட்டிங், ஒரு சிறப்பான பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும்.

பாகிஸ்தான் அணி தங்களது நம்பிக்கையையும், உத்வேகத்தையும் வைத்து புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும். ஆரம்பத்திலேயே ஒரு சில விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். குறிப்பாக அபிஷேக் மற்றும் கில் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்தியா பின்னடைவை சந்திக்கும். இது ஒரு நெருக்கமான ஆட்டமாக இருக்கும். முடிவில் சிறந்த அணி வெற்றி பெற வேண்டும்” என கூறினார்.

1 More update

Next Story