ஆசிய கோப்பை: எங்களுக்கு எதிராக விளையாட இந்தியா மறுக்க வேண்டும்..ஏனெனில் - பாக்.முன்னாள் வீரர்


ஆசிய கோப்பை: எங்களுக்கு எதிராக விளையாட இந்தியா மறுக்க வேண்டும்..ஏனெனில் - பாக்.முன்னாள் வீரர்
x

image courtesy:PTI

தினத்தந்தி 15 Aug 2025 12:42 AM IST (Updated: 15 Aug 2025 5:14 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், 2 மற்றும் 3-வது போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

குறிப்பாக கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 295 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த பாகிஸ்தான் 92 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி மோசமான தோல்வியை தழுவியது.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 34 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. 1991-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் வெல்வது இதுவே முதல்முறையாகும். இதனால் பாகிஸ்தான் அணியை அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட இந்தியா மறுக்க வேண்டுமென்று பிரார்த்திப்பதாக அந்நாட்டின் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடரில் நடந்தது போல, ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்தியா மறுக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். ஏனெனில் அவர்கள் எங்களை நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக தோற்கடிப்பார்கள். ஆப்கானிஸ்தானிடம் தோற்றால், எங்கள் நாட்டில் யாரும் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் இந்தியாவுக்கு எதிராக தோற்றால் அனைவரும் பைத்தியம் பிடித்தது போல ரியாக்சன் செய்வார்கள்” என்று கூறினார்.

ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story