ஆசிய கோப்பை: இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெற வாய்ப்பு உள்ளதா..? - ஆகாஷ் சோப்ரா


ஆசிய கோப்பை: இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெற வாய்ப்பு உள்ளதா..? -  ஆகாஷ் சோப்ரா
x

image courtesy:PTI

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

மும்பை,

நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெற வாய்ப்பு உள்ளதா..? என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கே.எல் ராகுல் உண்மையிலேயே அற்புதமான வீரர் தான். ஐ.பி.எல் தொடர்களை எடுத்துப் பார்த்தால் கடந்த சில சீசன்களாகவே அவர் 600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

ஆனாலும், டி20 கிரிக்கெட்டில் பொறுமையாக விளையாடுகிறார் என்ற மோசமான பெயர் அவர்மீது விழுந்துவிட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடுவதை ஏதோ தடுப்பதாக நினைக்கிறேன். ஏனெனில் நெருக்கடியான கட்டங்களின் போது அவர் தடுமாறுகிறார். மனதளவில் உறுதியாக இருந்தால் நிச்சயம் அவரால் மிகச் சிறப்பாக விளையாட முடியும்.

பும்ராவுக்கு எதிராக ஐ.பி.எல் போட்டிகளின் போது ஒருமுறை அவர் கவர் திசையில் அடித்த சிக்சரை நான் மறக்க மாட்டேன். என்னை பொறுத்தவரை தற்போதைய இந்திய டி20 அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் என பல வீரர்கள் தங்களது நிலையான இடத்திற்காக காத்திருக்கின்றனர்.

எனவே, கே.எல்.ராகுலின் கதை டி20 கிரிக்கெட்டில் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். தொடக்க வீரராக வாய்ப்பை இழந்த அவர் மிடில் ஆர்டரிலாவது விளையாடலாம் என்று பார்த்தால் இந்திய அணியின் தற்போதைய மிடில் ஆர்டரிலும் மிக பலமான வீரர்கள் இருப்பதால் கே.எல்.ராகுல் மீண்டும் டி20 அணிக்கு திரும்புவது சாத்தியமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story