ஆசிய கோப்பை அரையிறுதி: இந்திய அணிக்கு கடின இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்

image courtesy:twitter/@ACCMedia1
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹபிபுர் ரஹ்மான் சோகன் 65 ரன்கள் அடித்தார்.
தோகா,
வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த வங்காளதேசம், இலங்கை அணியும், ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் இன்று நடக்கும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹபிபுர் ரஹ்மான் சோகன் - ஜிஷன் ஆலம் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 4.2 ஓவர்களில் 43 ரன்கள் அடித்த நிலையில் பிரிந்தது. ஜிஷன் ஆலம் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சவத் அப்ரார் 13 ரன்களிலும், அக்பர் அலி 9 ரன்களிலும், அபு ஹைதர் ரோன் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் தொடக்க ஆட்டக்காரர ஆன சோகன் நிலைத்து விளையாடி அணிக்கு வலுவூட்டினார். சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த அவர் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய எஸ்.எம். மெஹெரோப் அணி நல்ல நிலையை எட்ட உதவினார். வெறும் 18 பந்துகளை எதிர்கொண்ட எஸ்.எம். மெஹெரோப் 48 ரன்கள் அடித்து அசத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த யாசிர் அலி 17 ரன்கள் (9 பந்துகள்) அடித்தார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்காளதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா தரப்பில் குர்ஜப்னீத் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கி உள்ளது.






