ஆஸி. அசத்தல் பந்துவீச்சு.. இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் அடித்தார்.
மெல்போர்ன்,
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2-வது ஆட்டம் மெல்போர்னில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ கண்டத்திலிருந்து தப்பித்த சுப்மன் கில் 5 ரன்களில் கேட்ச் ஆனார்.
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 2 ரன்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், திலக் வர்மா டக் அவுட் ஆகியும் இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி அணிக்கு வலு சேர்த்தார். இதனிடையே அக்சர் படேல் (7 ரன்கள்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
அந்த சமயத்தில் இந்திய அணி 49 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை தடுமாறியது. இந்த இக்கட்டான சூழலில் அபிஷேக் சர்மாவுடன் ஹர்ஷித் ராணா கை கோர்த்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை கவுரமான நிலைக்கு கொண்டு சென்றனர். சிறப்பாக ஆடிய அபிஷேக் அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்த ஜோடி 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. ஹர்ஷித் ராணா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே (4 ரன்கள்), குல்தீப் யாதவ் (0) நிலைக்கவில்லை. அதிரடியாக அபிஷேக் சர்மா 68 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முடிவில் 18.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜஸ்பிரித் பும்ரா கடைசி விக்கெட்டாக ரன் அவுட் ஆனார். அசத்தலாக பந்துவீசிய ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.






