148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்... 3-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் அடித்து அசத்தினார்.
மான்செஸ்டர்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இது இந்திய அணியை விட 311 ரன்கள் அதிகமாகும். இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 150 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 311 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3 ஓவர்கள் முடிவில் ஒரு ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இந்த ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 120 ரன்கள் அடித்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். மேலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 229 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் 148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7 ஆயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. கேரி சோபர்ஸ் - 8,032 ரன்கள் & 235 விக்கெட்டுகள்
2. ஜாக் காலிஸ் - 13,289 ரன்கள் & 292 விக்கெட்டுகள்
3. பென் ஸ்டோக்ஸ் - 7,023 ரன்கள் & 229 விக்கெட்டுகள்*






