இந்தியா-பாகிஸ்தான் போட்டியை புறக்கணியுங்கள் - சமூக வலைதளத்தில் வலுக்கும் எதிர்ப்பு

image courtesy:PTI
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் இன்று துபாயில் நடைபெறுகின்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அதைத்தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி காரணமாக இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் பிறகு இரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இத்தகைய உணர்வுபூர்வமான சூழலில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே இந்த ஆட்டத்திற்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு அந்த நாட்டுடனான இந்தியாவின் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இரு நாடுகளும் கிரிக்கெட் போட்டியில் மோதக்கூடாது என்று ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேச போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் ஆடுகிறது. இருப்பினும் இதனை தாங்கி கொள்ள முடியாத நெட்டிசன்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை புறக்கணியுங்கள் என்று ‘ஹேஷ்டேக்’கை உருவாக்கி சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.






