பும்ரா விவகாரம்: இது முட்டாள்தனமானது - இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவர் விமர்சனம்

image courtesy:PTI
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியது மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.
மும்பை,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடரில் இந்திய அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பணிச்சுமையை கருத்தில் கொண்டு 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார். இப்படி பும்ரா இந்தத் தொடர் முழுவதும் விளையாடாமல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. அதோடு பும்ரா தனது விருப்பத்திற்கு ஏற்ப போட்டிகளை தேர்வு செய்து விளையாடக்கூடாது என்று பல முன்னாள் வீரர்களும் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் வீரர்களுக்கான பணிச்சுமை மேலாண்மை என்பது முட்டாள்தனமானது இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவரும், வீரருமான சந்தீப் பட்டீல் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ முக்கியமான போட்டிகளை முன்னணி வீரர்கள் தவற விடுவதை இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) எப்படி ஏற்றுக்கொள்கிறது என தெரியவில்லை. இந்திய அணியில் கேப்டன், தலைமை பயிற்சியாளரை விட உடல்தகுதி நிபுணர்தான் முக்கியமானவரா? அப்படி என்றால் தேர்வாளர்களின் பணி என்ன? இனி தேர்வாளர்களின் கூட்டத்தில் உடல்தகுதி நிபுணரும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டுமா? அவர்தான் வீரர்களை முடிவு செய்வாரா?. நீங்கள் நாட்டுக்காக விளையாட தேர்வு செய்யப்படும்போது, உயிரை கொடுத்தாவது விளையாட வேண்டும். ஏனெனில் நீங்கள் ஒரு போர் வீரன் போன்றவர்.
முந்தைய காலத்தில் சுனில் கவாஸ்கர் 5 நாட்களும் முழுமையாக ஆடியதை பார்த்து இருக்கிறேன். கபில்தேவ், டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலான நாட்களில் பந்து வீசியதை பார்த்துள்ளேன். வலை பயிற்சியில் கூட எங்களுக்கு பந்து வீசுவார். ஆனால் அவர்கள் ஓய்வு கேட்டதும் இல்லை. தொடர்ச்சியாக நிறைய போட்டிகளில் ஆடுகிறோம் என புகார் சொன்னதும் இல்லை. அவர்கள் 16 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி இருக்கிறார்கள். 1981-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்டில் தலையில் காயமடைந்த போதிலும் அடுத்த டெஸ்டை தவற விடாமல் ஆடினேன்.
தற்போதைய நவீன கால கிரிக்கெட்டில் எல்லாவிதமான வசதி வாய்ப்புகளும் உள்ளன. நாங்கள் விளையாடிய காலத்தில் காயத்தில் மீள்வதற்கான பயிற்சி முறைகள் எல்லாம் கிடையாது. காயங்கள் ஏற்பட்ட போதிலும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடி இருக்கிறோம். நாட்டுக்காக மகிழ்ச்சியாக விளையாடுகிறோம் என சொல்ல வேண்டுமே தவிர நடிக்கக்கூடாது. என்னை பொறுத்தவரை, வீர்களுக்கான பணிச்சுமை மேலாண்மை முட்டாள்தனமானது. ஒரு வீரர் முழு உடல்தகுதியுடன் இல்லாதபோது எப்படி தேர்வு குழுவினர் அணிக்கு தேர்வு செய்கிறார்கள். இந்த பணிச்சுமை விவகாரத்தை ஊக்குவிக்கக்கூடாது” என்று கூறினார்.






