டி20 உலகக் கோப்பை தொடரை தவறவிடும் கம்மின்ஸ் ?

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிட்னி,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் காயம் காரணமாக கம்மின்ஸ் விளையாடவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில், கடந்த 17ம் தேதி தொடங்கிய 3வது போட்டியில் கம்மின்ஸ் விளையாடினார். ஆனாலும் காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் அடுத்து நடைபெற உள்ள 4 மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
2026 டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியதாவது,
உலகக் கோப்பையை எதிர்நோக்கியுள்ளோம். கம்மின்ஸ் விளையாடுவது தொடர்பாக நிலைமை இன்னும் தெளிவாக இல்லை. அவர் விளையாடுவாரா இல்லையா என்பதை என்னால் உண்மையில் சொல்ல முடியாது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்,என்று மெக்டொனால்ட் கூறினார்.






