இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி: இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் புலம்பல்


இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி:  இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் புலம்பல்
x

மகளிர் உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 4 ரன்னில் தோல்வியை தழுவியது.

இந்தூர்,

13-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று அரங்கேறிய 20-வது லீக் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மல்லுகட்டின.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முன்னாள் கேப்டன் ஹீதர் நைட் 109 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி நல்ல தொடக்கத்தை பெற்று அபாரமாக விளையாடி வந்தது. ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 36 ரன்கள் அடிக்க வேண்டும். கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்த நிலையில் இந்தியாவின் வெற்றி உறுதி என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மந்தனா ஆட்டமிழந்த பிறகு யாருமே நினைக்காத வகையில் ஆட்டம் தலைக்கீழாக மாறி இங்கிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் இங்கிலாந்து அரைஇறுதிக்கும் தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேசுகையில், “நான் ஆட்டமிழந்தது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது. இருப்பினும் எங்கள் அணியில் நிறைய பேர்கள் இருந்தார்கள். ஆனால் எப்படி நாங்கள் தோற்றோம் என்று எனக்கே தெரியவில்லை. இங்கிலாந்து அணிக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து வீராங்கனைகள் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து அபாரமாக பந்து வீசி விக்கெட்டை எடுத்தார்கள். உண்மையிலேயே மனது கஷ்டமாக இருக்கின்றது. அவ்வளவு உழைத்தும் கடின உழைப்பை போட்டும் கடைசி 5-6 ஓவர்களில் எங்களால் வெற்றியை பெற முடியவில்லை. நாங்கள் போட்ட திட்டத்துக்கு மாறுதலாக கடைசி ஓவர்களில் நடந்து விட்டது.

இது உண்மையிலேயே எங்களின் இதயத்தை நொறுக்கி விட்டது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை தான் விளையாடி வருகின்றோம். தோல்வியை நாங்கள் எளிதில் ஒப்புக் கொள்வது கிடையாது. எனினும் நாங்கள் வெற்றி கோட்டை தாண்டுவதும் இல்லை. கடைசி மூன்று போட்டிகளில் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடியும் தோல்வியை தழுவி இருக்கின்றோம். இந்த போட்டியில் பெரும்பான்மையான விஷயங்களில் நாங்கள் சரியாகவே செயல்பட்டு இருக்கிறோம். கடைசி 5 ஓவர்கள் குறித்து நாங்கள் மீண்டும் யோசிக்க வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறினார்.

1 More update

Next Story