கொல்கத்தா டெஸ்டில் படுதோல்வி: பயிற்சியாளர் கம்பீருக்கு கங்குலி அறிவுரை

இந்திய அணி 35 ஓவர்களில் வெறும் 93 ரன்னில் சுருண்டது.
கொல்கத்தா,
கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது நாளிலேயே படுதோல்வி அடைந்தது. 124 ரன் இலக்கை கூட துரத்தமுடியாமல் இந்திய அணி 35 ஓவர்களில் வெறும் 93 ரன்னில் சுருண்டது. பொதுவாக இந்திய ஆடுகளங்களில் (பிட்ச்) 4-வது நாளில் இருந்து தான் சுழலுக்கு ஒத்துழைக்கும். ஆனால் இந்த ஆடுகளத்தில் தொடக்க நாளிலேயே சுழற்பந்து வீச்சின் கை ஓங்கியது. அதுவும் 2-வது நாளில் பந்து தாறுமாறாக சுழன்று திரும்பியதால் பேட்ஸ்மேன்கள் திண்டாடி போனார்கள்.
ஆனால் இத்தகைய ஆடுகளத்தை கேட்டது நாங்கள் தான். இது ஒன்றும் விளையாட முடியாத அளவுக்கு மோசமான ஆடுகளம் கிடையாது. பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தில் நன்றாக செயல்பட்டு இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கொல்கத்தா ஆடுகளம் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,
இங்கு எந்த சர்ச்சையும் இல்லை. இது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய சிறந்த ஆடுகளமாக இல்லை தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியா தோற்று விட்டது. 124 ரன் இலக்கை ‘சேசிங்’ செய்திருக்க வேண்டும். கவுதம் கம்பீர் தான் இப்படிப்பட்ட ஆடுகளத்தை விரும்பினார். அதன் அடிப்படையில் பிட்ச் பராமரிப்பாளருக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது என்பது உண்மை தான்.
கம்பீருடன் எனக்கு மிகுந்த நட்புறவு உண்டு. இந்தியாவுக்காக 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அந்த பணியை இப்போது பயிற்சியாளராக தொடருகிறார். ஆனால் சொந்த மண்ணில் நல்ல ஆடுகளங்களில் விளையாட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். டெஸ்ட் அணியில் இடம் பெறுவதற்கு ஷமி தகுதியானவர். ஷமியும், சுழற்பந்து வீச்சாளர்களும் அவருக்கு டெஸ்டில் வெற்றியை தேடித் தருவார்கள்.
சிறந்த ஆடுகளங்களில் விளையாட வேண்டியது முக்கியம். இதை கம்பீர் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். பேட்டிங்கில் 350-400 ரன்கள் எடுக்காவிட்டால் வெற்றி பெற முடியாது. முதலில் தங்களது வீரர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மூன்று நாட்களில் போட்டிகளை முடிக்க நினைக்காமல் 5 நாட்கள் விளையாடி வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு கங்குலி கூறினார்.






