இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் தொடர்: இந்த அணிதான் வெற்றி பெறும் - மெக்ராத் கணிப்பு

ஆஷஸ் டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.
சிட்னி,
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நூற்றாண்டுக்கும் மேலாக 5 போட்டிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதன்படி இந்த தொடரின் முதல் போட்டி வருகிற நவம்பர் 21-ம் தேதி பெர்த்தில் தொடங்க உள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த தொடர் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகக்கோப்பையை விட ஆஷஸ் தொடரை வெல்வது மிகவும் முக்கியம் என்று இருநாட்டு ரசிகர்களும் கருதுவது வழக்கம். அதனால் இந்த தொடரில் அனல் பறக்கும். வீரர்களும் மாறி மாறி ஆக்ரோஷத்துடன் மோதுவதால் இந்த தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் இம்முறை இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் மெக்ராத் கணித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “நான் ஒரு கணிப்பு சொல்வது மிகவும் அரிது, இல்லையா? நான் வேறு ஒன்றும் சொல்ல முடியாது . 5-0 என ஆஸ்திரேலியாதான் வெற்றி பெறும். எங்கள் அணி மீது நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் ஆகியோர் தங்கள் சொந்த மண்ணில் பந்து வீசும்போது எதிரணிக்கு மிகவும் கடினமாக இருக்கும். அதுபோக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் கொண்டுள்ள சாதனைக்கு அவர்களால் ஒரு டெஸ்டில் வெற்றி பெற முடியுமா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்” என்று கூறினார்.






