இறுதிப்போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற சவாலான இலக்கு நிர்ணயித்த இந்தியா

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்கள் அடித்தார்.
image courtesy:twitter/@BCCIWomen
image courtesy:twitter/@BCCIWomen
Published on

மும்பை,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.

மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா மற்றும் ஷபாலி வர்மா களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்ட இந்த ஜோடி இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தது.

பொறுப்பாக ஆடிய ஜோடி எதுவான பந்துகளை பவுண்டரிக்கும் ஓட விட்டது. இதனால் இந்திய அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. இவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது. முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடி 17.4 ஓவர்களில் பிரிந்தது. மந்தனா 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து முந்தைய ஆட்டத்தின் நாயகியான ஜெமிமா ரோட்ரிக்ஸ் களமிறங்கினார். ஷபாலி - ஜெமிமா கூட்டணியும் 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. சிறப்பாக ஆடிய ஷபாலி வர்மா 87 ரன்கள் அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் களமிறங்கினார்.

சிறிது நேரத்திலேயே ஜெமிமா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய தீப்தி சர்மா சிறப்பாக ஆடி அணிக்கு வலு சேர்த்தார். இதனிடையே ஹர்மன்ப்ரீத் 20 ரன்களிலும், அமன்ஜோத் 12 ரன்களிலும் அவுட்டாகினர். இறுதி கட்டத்தில் தீப்தி உடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் அணியின் ரன் வேகத்தை சீராக உயர்த்தினார். ரிச்சா கோஷ் 34 ரன்களில் 49-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் அடித்துள்ளது. தீப்தி சர்மா 58 ரன்களில் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா காக்கா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதனையடுத்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com