முதல் டி20 போட்டி வெற்றி: கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன..?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
கட்டாக்,
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடனும், ஜிதேஷ் ஷர்மா 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 176 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 12.3 ஓவர்களில் 74 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக பிரெவிஸ் 22 ரன்க்ள் அடித்தார். இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், “டாஸின் போதே இந்த போட்டியில் நாங்கள் வெல்ல 50-50 வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் முதலில் பேட்டிங் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 48 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து சரிந்த பின்பு அங்கிருந்து மீண்டு 175 ரன்கள் எடுத்தோம்.
ஹர்திக், அக்சர் மற்றும் திலக் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இறுதியில் ஜிதேஷ் உள்ளே வந்து, சிறப்பாக செயல்பட்டு தனது பங்களிப்பை செய்தார். அது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். முதலில், நாங்கள் 160 ரன்கள் எடுப்போம் என்று நினைத்தோம், ஆனால் பின்னர் 175 ரன்கள் அடித்தது நம்ப முடியாததாக இருந்தது.
7-8 பேட்ஸ்மேன்களில் 2-3 பேருக்கு குறிப்பிட்ட நாள் சிறப்பாக செல்லவில்லை என்றால் மற்ற பேட்ஸ்மேன்கள் சூழ்நிலையை பூர்த்தி செய்யும் நாட்கள் இருக்கும். டி20 கிரிக்கெட் இப்படித்தான் செல்கிறது, எல்லோரும் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் பயமின்றி மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்ய விரும்புகிறோம்.
தொடக்க கட்டத்தில் அர்ஷ்தீப்பும் பும்ராவும்தான் பந்து வீச சரியான பவுலர்கள் என்று நினைக்கிறேன். ஹர்திக் காயத்திலிருந்து மீண்டு வந்ததால், அவரையும் கவனித்துக் கொள்வது முக்கியம். அவர் பந்து வீசிய விதத்தில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
முதலில் பேட்டிங் செய்து 48/3 என சரிந்த நாங்கள் 7 - 15 ஓவர்களில் 90 - 91 ரன்களை குவித்து இறுதியில் சிறப்பாக பினிஷிங் செய்தது பாராட்டத்தக்கது. நாங்கள் பந்து வீசிய விதம் எங்களிடம் இருக்கும் தேர்வுகள் ஆகியவற்றிற்காக எனக்கு மகிழ்ச்சி” என்று கூறினார்.






