முதல் டி20: அதிரடியில் கலக்கிய டிம் டேவிட்.. தென் ஆப்பிரிக்க அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

image courtesy:twitter/@cricketcomau
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக க்வேனா மபாகா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
டார்வின்,
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி டார்வினில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த போட்டியின் முதல் பந்தை எதிர்கொண்ட மார்ஷ் அதை சிக்சருக்கு தூக்கி அதிரடியாக தொடங்கினார். ஆனால் அதிரடியை தொடர முடியவில்லை. மார்ஷ் 13 ரன்களிலும், ஹெட் 2 ரன்களிலும், ஜோஷ் இங்கிலிஸ் கோல்டன் டக் ஆகியும் அதிர்ச்சி அளித்தனர்.
இந்த நெருக்கடியான சூழலில் களமிறங்கிய கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு வலு சேர்த்தனர். வெறும் 13 பந்துகளை எதிர்கொண்ட கிரீன் 35 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் டிம் டேவிட் அதிரடியில் கலக்கினார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்ட அவர் 52 பந்துகளில் 83 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனிடையே மிச்செல் ஓவன் (2 ரன்கள்), மேக்ஸ்வெல் (1 ரன்) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ஆஸ்திரேலியா அதிரடியாக ரன் குவித்தாலும் தென் ஆப்பிரிக்க பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதி கட்டத்தில் பென் துவார்ஷுயிஸ் (17 ரன்கள்), நாதன் எல்லீஸ் (12 ரன்கள்) ஆகியோரின் கணிசமான ஒத்துழைப்புடன் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையை எட்டியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கடைசி பந்தில் எல்லீஸ் ரன் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மபாகா 4 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.






