முதல் டெஸ்ட்: ரிட்டயர்டு அவுட் ஆன சுப்மன் கில்.. 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வருவாரா..?


முதல் டெஸ்ட்: ரிட்டயர்டு அவுட் ஆன சுப்மன் கில்.. 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வருவாரா..?
x
தினத்தந்தி 15 Nov 2025 2:21 PM IST (Updated: 15 Nov 2025 11:27 PM IST)
t-max-icont-min-icon

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் சுப்மன் கில் 4 ரன்களில் ரிட்டயர்டு அவுட் ஆனார்.

கொல்கத்தா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. ராகுல் 13 ரன்களுடனும் (59 பந்து, 2 பவுண்டரி), வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னுடனும் (38 பந்து) களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 30 ரன்கள் பிந்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சை தொடங்கி உள்ளது.

முன்னதாக இந்த இன்னிங்சில் இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில் 3 பந்துளில் 4 ரன்கள் அடித்த நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் ஆகி வெளியேறினார். இந்திய இன்னிங்சின் 35-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்த பிறகு, சுப்மன் கில் களமிறங்கினார். அவர் வெறும் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்திருந்த அவருக்கு கழுத்து பகுதியில் லேசான வலி ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவர், கழுத்தை பிடித்தபடி களத்திலேயே நின்றார்.

உடனடியாக இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் விரைந்து வந்து அவருக்கு முதலுதவி அளித்தார். அவரால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு வலி அதிகமாக இருந்ததால், வேறு வழியின்றி ஆட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேற கில் முடிவு செய்தார். இந்திய அணி விக்கெட்டுகளை இழந்த போதிலும் அவரா பேட்டிங் செய்ய வர முடியவில்லை. இதனால் அவர் ரிட்டயர்டு அவுட் ஆனார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இத்தகைய சூழலில் அவர் 2-வது இன்னிங்சிலாவது பேட்டிங் செய்ய வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில், “சுப்மன் கில்லுக்கு கழுத்து பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ மருத்துவக் குழு அவரை கண்காணித்து வருகிறது. அவரது முன்னேற்றத்தைப் பொறுத்து அவர் களத்திற்கு திரும்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளது.

1 More update

Next Story