கெய்க்வாட் அபார சதம்.. தென் ஆப்பிரிக்க ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அபார வெற்றி


கெய்க்வாட் அபார சதம்.. தென் ஆப்பிரிக்க ஏ அணியை வீழ்த்தி இந்தியா ஏ அபார வெற்றி
x

image courtesy:PTI

இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

ராஜ்கோட்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க ஏ கிரிக்கெட் அணி இந்தியா ஏ-க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. அதன்படி இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக டெலானோ போட்ஜீட்டர் 90 ரன்களும், டயான் பாரெஸ்டர் 77 ரன்களும், பிஜோர்ன் போர்டுயின் 59 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 286 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்க்வாட் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். சிறப்பாக ஆடிய இருவரும் இந்திய ஏ அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அபிஷேக் சர்மா 31 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரியான் பராக் (8 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. மறுமுனையில் கெய்க்வாட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் வந்த கேப்டன் திலக் வர்மா (39 ரன்கள்), இஷான் கிஷன் (17 ரன்கள்), நிதிஷ் ரெட்டி (37 ரன்கள்) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் ஆன கெய்க்வாட் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அபாரமாக ஆடிய அவர் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் இந்தியா ஏ 49.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. கெய்க்வாட் 117 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா ஏ 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது போட்டி 16-ம் தேதி நடைபெற உள்ளது.

1 More update

Next Story