2027 ஆம் ஆண்டு வரை கம்பீர் பயிற்சியாளராக நீடிப்பார் என தகவல்

தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள்
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது. அடுத்த ஓராண்டுக்குள் 0-2 என தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இதனால் தலைமை பயிற்சியாளர் கம்பீரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் குரல் கொடுத்து வருகிறார்கள். கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி இதுவரை 19 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது.
இந்த நிலையில் , எந்த ஒரு அவசர முடிவையும் எடுக்க பிசிசிஐ விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு பயிற்சியாளராக பொறுப்பேற்ற கம்பீரின் ஒப்பந்தம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ளது . இதனால் இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீரே தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தோல்வி தொடர்பாக கம்பீரிடம் பிசிசிஐ விளக்கம் கேட்க உள்ளது.






