நாங்கள் தோல்வியை சந்திக்க காரணம் அவர்தான் - இங்கிலாந்து கேப்டன்


நாங்கள் தோல்வியை சந்திக்க காரணம் அவர்தான் - இங்கிலாந்து கேப்டன்
x

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.

சென்னை,

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பட்லர் 45 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அக்சர் மற்றும் வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தாலும், 3-வது வரிசையில் களம் கண்டு கடைசி வரை நிலைத்து நின்று நேர்த்தியாக ஆடிய திலக் வர்மா அணியை கரைசேர்த்தார். 19.2 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. திலக் வர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில், "உண்மையிலேயே இது ஒரு நல்ல போட்டி இருந்தாலும் இந்திய வீரரான திலக் வர்மா எங்களிடமிருந்து வெற்றியை பறித்து சென்று விட்டார். நாங்கள் இந்த போட்டியில் நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தி இருந்தோம். அதேபோன்று அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தோம். இருந்தாலும் இந்திய அணி சிறப்பாக விளையாடிய எங்களை வீழ்த்தி விட்டது.

இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்த விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி. ஏனெனில் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகள் விழுந்தாலும் அதிரடியாக விளையாடினோம். அதைத்தான் ஒரு அணியாக நாங்கள் விரும்புகிறோம். இந்த போட்டியில் வெற்றிக்கு தேவையான அளவு ரன்களை அடித்ததாகவே நினைக்கிறோம். ஆனாலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு எங்களை வீழ்த்தினர்" என்று கூறினார்.

1 More update

Next Story