கோலி, ரோகித் சர்மாவை ஆஸ்திரேலிய தொடருக்கு எப்படி தேர்வு செய்தார்கள்? முன்னாள் கேப்டன்


கோலி, ரோகித் சர்மாவை ஆஸ்திரேலிய தொடருக்கு எப்படி தேர்வு செய்தார்கள்? முன்னாள் கேப்டன்
x

இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது

மும்பை,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது குறித்து இந்திய முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான திலிப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘ரோகித்தும், கோலியும் கடைசியாக சர்வதேச போட்டியில் விளையாடி நீண்ட நாட்கள் (மார்ச் மாதம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் ஆடினர்) ஆகிவிட்டது. இதனால் இப்போது அவர்களது ஆட்டத்திறன் மற்றும் உடல் தகுதியை மதிப்பிடுவது மிகவும் கடினம். அவர்களது மிகச்சிறந்த சாதனை காரணமாக ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகியுள்ளனர். அவர்கள் அற்புதமான வீரர்கள். இந்திய அணிக்காக நிறைய பங்களிப்பு அளித்துள்ளனர். அனைத்து வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டியிலும் பல ஆட்டங்களில் வெற்றி தேடித் தந்துள்ளனர்.

டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பிறகு இப்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் மட்டும் ஆடுகிறார்கள். ஆனால் இந்த சீசனில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மிக குறைவாகவே நடத்தப்படுகிறது. போதிய ஆட்டங்கள் இல்லாததால் அவர்கள் எந்த அளவுக்கு உடல்தகுதி மற்றும் பார்மில் இருக்கிறார்கள் என்பதை கண்டறிவது கடினமாகும். ஆனால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால், தேர்வு கமிட்டியினர் இதை கவனித்திருக்கலாம். இருப்பினும் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. ரோகித், கோலி அணியில் தொடர வேண்டுமா அல்லது அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட தயாராக இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமா? என்பது தேர்வாளர்களின் கையில் தான் உள்ளது. இது, இந்திய கிரிக்கெட்டை தேர்வாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பொறுத்தது’ என்றார்.

1 More update

Next Story