கில்லும் வேணாம், ஐயரும் வேணாம்.. தோனி போல திறமை கொண்ட அவரை கேப்டனாக்குங்கள் - சுரேஷ் ரெய்னா

இந்திய ஒருநாள் அணியின் தற்போதைய கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார்.
மும்பை,
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் 2027 உலகக்கோப்பை (50 ஓவர்) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்ற அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார்.
இருப்பினும் ஒருநாள் உலகக்கோப்பை வரை அவரால் பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான். அத்துடன் அடுத்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் ரோகித் சர்மா 40 வயதை எட்டிவிடுவார் என்பதால் அவர் உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பது கடினம் என பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.
அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே புதிய கேப்டனை நியமிக்க பி.சி.சி.ஐ. ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த பதவிக்கு சுப்மன் கில் முன்னணி வாய்ப்பில் இருப்பதாக கூறப்பட்டது. மறுபுறம் இந்த பதவிக்கு ஸ்ரேயாஸ் ஐயரின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் சுப்மன் கில்லை விட அனுபவம் மற்றும் ஆல் ரவுண்ட் திறமையுடைய ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அதிசயங்களை நிகழ்த்துவார் என்று இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். குறிப்பாக தோனி, கபில் தேவ் போல பாண்ட்யா திறமையுடையவர் என்று ரெய்னா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “சுப்மன் கில் கேப்டனாக வர வாய்ப்புள்ளது. அவர்களும் அதையே முடிவெடுத்துள்ளார்கள். ஸ்ரேயாஸை விட கில் தலைமைப் பொறுப்புக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இப்போதும் ஹர்திக் பாண்ட்யா அற்புதங்களைச் செய்வார் என்று நான் நினைக்கிறேன். அவரிடம் கபில் தேவ் பாஜி போன்ற அனுபவம் இருக்கிறது. மிகவும் நேர்மறையான அணுகு முறையைக் கொண்ட அவர் வீரர்களின் கேப்டன். அவர் தோனியின் தோற்றத்தை எனக்கு காண்பித்தார். அவர் களத்தில் நடந்துகொள்ளும் விதம் எனக்குப் பிடிக்கும்” என்று கூறினார்.






