இந்தியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?

image courtesy:BCCI
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது.
துபாய்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது.
இந்த போட்டி முடிவடைந்ததையடுத்து 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து 66.67 சதவீத புள்ளிகளுடன் இலங்கை 2-வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா ஒரு இடம் உயர்ந்து 46.67 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக தோல்வி கண்ட இங்கிலாந்து ஒரு இடம் சரிந்து 43.33 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்காளதேசம் 16.67 சதவீத புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
6 முதல் 9 இடங்கள் வரை முறையே வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்கா (சதவீதம் ஏதும் இன்றி) உள்ளன.






