இன்று நடைபெற இருந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு

மந்தனாவுக்கும் அவரது காதலரான பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.
image courtesy:instagram/palash_muchhal
image courtesy:instagram/palash_muchhal
Published on

மும்பை,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவுக்கு இன்று நடைபெற இருந்தது. மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

மந்தனாவும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இருவரும் சமீபத்தில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்தினர்.

இந்த சூழலில் மந்தனா - பலாஷ் முச்சல் ஜோடியின் திருமணம் மகராஷ்டிராவில் உள்ள அவரது சொந்த ஊரான சாங்லியில் இன்று (23-ந்தேதி) நடைபெற இருந்தது. இரு வீட்டாரின் சம்மதத்தோடும் இவர்களது திருமணம் நடைபெற இருந்தது. கடந்த சில தினங்களாக இவர்களது திருமண விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வந்தது. அதில் பல இந்திய வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சலின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மந்தனாவின் தந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை மந்தனாவின் மேலாளர் உறுதிபடுத்தியுள்ளார்.

இது குறித்து மந்தனாவின் மேலாளர் கூறியது பின்வருமாறு:- அவரது தந்தை இன்று காலை முதல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனையடுத்து அவர் சாங்லியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்த சூழ்நிலையில் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதில் மந்தனா மிகவும் தெளிவாக இருந்தார். அதனால்தான் திருமணத்தை ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என்று  கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com