இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Nov 2025 7:52 PM IST
28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தேனி, நீலகிரி, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 23 Nov 2025 7:42 PM IST
* தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
- 23 Nov 2025 7:35 PM IST
கனமழை: 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், கனமழை எதிரொலியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை (24-11-2025) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
- 23 Nov 2025 7:06 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன்
லக்ஷயா சென் 21 - 15 மற்றும் 21-11 என்ற நேர் செட் கணக்கில் யுஷி தனகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
- 23 Nov 2025 7:02 PM IST
நாணயங்களை விழுங்கும் குழந்தைகள்... பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? - மருத்துவர் அறிவுறுத்தல்
குழந்தைகள் ஏதாவது பொருளை விழுங்கி விட்டால் பெற்றோர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும். ஒரு வேளை நாணயங்களை விழுங்கி குழந்தைகள் சுய நினைவை இழக்கும் சூழல் ஏற்பட்டால் மட்டும் குழந்தையின் தலையை கீழே சாய்த்து, தோள்பட்டைகளுக்கு இடையில் வேகமாகத் தட்டி முதலுதவி அளிக்க வேண்டும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
- 23 Nov 2025 7:01 PM IST
துபாய் ஏர் ஷோ: விமான விபத்தில் உயிரிழந்த விமானிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
துபாய் ஏர் ஷோ நிகழ்ச்சியில் தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த ‘விங் கமாண்டர்' நமன்ஷ் சியாலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- 23 Nov 2025 6:16 PM IST
தொடரும் கனமழை... தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால், நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக பிற பகுதிகளில் இருந்து ஆற்றுப்பகுதிகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் படித்துறையையும் கல்மண்டபங்களையும் மூழ்கடித்து, அத்துடன் குறுக்குத்துறை முருகன் கோவிலுக்குள்ளும் புகுந்தது. எனவே ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
- 23 Nov 2025 6:15 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 23 Nov 2025 6:08 PM IST
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா..?
இந்திய அணி விவரம்:
ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல். ராகுல் (கேப்டன்), ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரேல்
- 23 Nov 2025 4:59 PM IST
கடலூர்: கனமழையால் மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழந்த சோகம்
கடலூர் மாவட்டத்தில் கனமழையால், மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















