தொடர் நாயகி விருதை பெற்றோருக்கு சமர்ப்பித்த இந்திய வீராங்கனை

50 ஓவர் உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் அரைசதத்துடன் 5 விக்கெட் எடுத்த முதல் நபர் தீப்தி தான்.
சென்னை,
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் விளாசியதுடன், பந்து வீச்சில் 39 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . 50 ஓவர் உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் அரைசதத்துடன் 5 விக்கெட் எடுத்த முதல் நபர் தீப்தி தான்.
தீப்தி ஷர்மா இந்த தொடரில் மொத்தம் 22 விக்கெட்டுகளும், 3 அரைசதம் உள்பட 215 ரன்களும் எடுத்து தொடர்நாயகியாக ஜொலித்தார். ஒரு உலகக் கோப்பையில் 200-க்கு அதிகமான ரன் மற்றும் 20-க்கு மேல் விக்கெட் எடுத்த முதல் வீராங்கனை என்ற அரிய சாதனைக்கும் உரியவரானார்.
28 வயதான தீப்தி ஷர்மா கூறுகையில்,
‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த உணர்வுபூர்வமான தருணத்தில் இருந்து வெளியே வர முடியாததால் எல்லாமே கனவு போல் உள்ளது. இறுதிப்போட்டியில் எனது பங்களிப்பை அளித்தது மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு ஆட்டத்திற்கும் அதிக அளவில் வந்து ஊக்கமளித்தனர். அவர்கள் இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. எனது தொடர்நாயகி விருதை எனது பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்றார்.






