சர்வதேச ஒருநாள், டி20 கிரிக்கெட்: உலக சாதனை படைத்த விராட் கோலி


சர்வதேச ஒருநாள், டி20 கிரிக்கெட்: உலக சாதனை படைத்த விராட் கோலி
x

சர்வதேச வெள்ளைப்பந்து போட்டிகளில் சச்சின் 18,436 ரன்கள் அடித்துள்ளார்.

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது. வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் அடித்த 74 ரன்களையும் சேர்த்து சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற உலக சாதனையை இவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் சச்சின் 18,436 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. விராட் கோலி - 18,443 ரன்கள்

2. சச்சின் - 18,436 ரன்கள்

3. குமார் சங்கக்கரா - 15,616 ரன்கள்

4. ரோகித் சர்மா - 15,589 ரன்கள்

5. ஜெயவர்த்தனே - 14,143 ரன்கள்

1 More update

Next Story