சர்வதேச டி20 கிரிக்கெட்: 7-க்கு 7 தோல்வி.. இந்திய அணியை துரத்தும் மோசமான சாதனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் இந்திய அணிக்கு 214 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சண்டிகார்,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி நியூசண்டிகாரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி காக் 90 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 214 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் திலக் வர்மா 62 ரன்கள் அடிக்க, தென் ஆப்பிரிக்கா தரப்பில் பார்த்மேன் 4 விக்கெட் கைப்பற்றினார். டி காக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி இதுவரை 7 முறை 210+ ரன்களை சேசிங் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் அந்த 7 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் டி20 கிரிக்கெட்டில் 210+ ரன்களை சேசிங் செய்ததில்லை என்ற மோசமான சாதனை இந்திய அணியை இன்னும் துரத்துகிறது.






