ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி


ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி
x

image courtesy:twitter/@ACCMedia1

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது.

துபாய்,

19 வயதுக்குட்பட்டோருக்கான 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (ஜூனியர்) துபாயில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 283 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பைசல் ஷினோசதா 103 ரன்கள் குவித்தார். வங்காளதேசம் தரப்பில் இக்பால் ஹொசைன் எமோன், ஷஹ்ரியர் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சவாத் அப்ரார் - எம்.டி. ரிபாத் பெக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்து அசத்தியது.

இவர்களில் ரிபாத் பெக் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சவாத் அப்ரார் 96 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்களின் சிறப்பான தொடக்கம் வங்காளதேச அணியின் வெற்றியை எளிதாக்கியது.

48.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ரன்கள் அடித்த வங்காளதேசம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் காதிர் ஸ்டானிக்சாய் மற்றும் ரூஹுல்லா அரபு தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

1 More update

Next Story