கொல்கத்தா டெஸ்ட்: 124 ரன்களை கூட எட்ட முடியாமல்... தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தோல்வி

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
கொல்கத்தா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே இந்திய சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக ஜடேஜா தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளை வேகமாக கைப்பற்றினார்.
2-வது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 35 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் அடித்திருந்தது. பவுமா 29 ரன்களுடனும், கார்பின் போஷ் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், அக்சர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணி 63 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.
இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. கார்பின் போஷ் - பவுமா கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்களில் கார்பின் போஷ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் கேப்டன் பவுமா நிலைத்து ஆடினார். மறுமுனையில் ஹார்மர் 7 ரன்களிலும், மகராஜ் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர்.
முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 54 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் பவுமா 55 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனிடையே 2-வது நாள் ஆட்டத்தின்போது கழுத்து வலி காரணமாக ரிட்டயர்டு அவுட் ஆன இந்திய கேப்டன் சுப்மன் கில் இந்த போட்டியிலிருந்து விலகினார். இதனால் இந்திய அணியில் 10 பேட்ஸ்மேன்கள் மட்டுமே களமிறங்கி வேண்டிய நிலை உருவானது.
இதனைதொடர்ந்து 124 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகியும், கே.எல்.ராகுல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் நிலைத்து விளையாட மறுமுனையில் விக்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்தன. துருவ் ஜூரெல் (13 ரன்), ரிஷப் பண்ட் (2 ரன்), ஜடேஜா (18 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர்.
இறுதி கட்டத்தில் அக்சர் படேல் சிறிது அதிரடி காட்ட இந்திய அணி வெற்றி பெறுவது போல் தெரிந்தது. இதனிடையே வாஷிங்டன் சுந்தர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். கேஷவ் மகராஜ் வீசிய 35-வது ஓவரில் முதல் 4 பந்துகளில் 2 சிக்சர் ஒரு பவுண்டரி விளாசிய அக்சர் படேல் (26 ரன்) 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த சிராஜ் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேற இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
2-வது இன்னிங்சில் 35 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 93 ரன்களில் ஆல் அவுட் ஆகி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் சிமோன் ஹார்மர் 4 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் மற்றும் கேஷவ் மகராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.






