லக்னோ ஆட்டம் ரத்து: டிக்கெட்கட்டணம் திருப்பி வழங்கப்படும் என அறிவிப்பு

போட்டி நடக்காததால் டிக்கெட்டுக்குரிய பணத்தை திரும்ப வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டது.
லக்னோ,
புகை மற்றும் கடுமையான பனியால் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடக்க இருந்த இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது டி20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.
போட்டி நடக்காததால் டிக்கெட்டுக்குரிய பணத்தை திரும்ப வழங்குவது இந்திய கிரிக்கெட் வாரியமா அல்லது உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கமா என்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் டிக்கெட்டுக்கு உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கமே முழு பொறுப்பு என கிரிக்கெட் வாரியம் கூறியது.
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெற்ற ரசிகர்களுக்கு அதற்குரிய பணம் அதே வழியில் திரும்ப வழங்கப்படும் என்றும், அது தொடர்பான விவரங்கள் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு அவர்களது இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க செயலாளர் பிரேம் மனோகர் குப்தா நேற்று தெரிவித்தார். கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கியவர்கள் வருகிற 20 முதல் 22-ந்தேதி வரை லக்னோ ஸ்டேடியத்தில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் வந்து தேவையான விவரங்களை தெரிவித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.






