அரையிறுதிக்கு முன்னேறியது பெரிய நிம்மதியை தந்துள்ளது - ஸ்மிருதி மந்தனா

Image Courtesy: @BCCIWomen
ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
புதுடெல்லி,
ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் கடைசி அணியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது பெரிய நிம்மதியை தந்துள்ளது என இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது எனக்கு மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. கடந்த 3 ஆட்டங்கள் எங்களுக்கு மிகவும் கடினமாக அமைந்தன. இந்த 3 ஆட்டங்களிலும் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம்.
ஆனால் வெற்றி பெறமுடியவில்லை. இந்நிலையில் வாழ்வா சாவா ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளது எங்களுக்கு மனநிம்மதியைத் தந்துள்ளது. பிரதிகா ராவல் அற்புதமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். களத்தில் என்னுடைய இயற்கையான விளையாட்டை விளையாட அவர் அனுமதித்தார். இவ்வாறு அவர் கூறினார்.






