

மும்பை,
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது.
இந்திய அணி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்றதை அடுத்து அணியின் முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் கூறுகையில், நமது மகளிர் அணி உலகக் கோப்பையை கையில் உயர்த்தி பிடிப்பதை பார்க்க வேண்டும் என்ற 20 ஆண்டுக்கு மேலான எனது கனவு ஒருவழியாக இப்போது நனவாகி இருக்கிறது.
2005-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை ஏற்பட்ட மனதை நொறுக்கிய தோல்வி, போராட்டம், கண்ணீர், தியாகம், ஒவ்வொரு இளம் வீராங்கனைகளும் பேட்டை கையில் எடுத்து நம்பிக்கையோடு செயல்பட்டது எல்லாம் தான் இந்த தருணத்துக்கு வழிவகுத்தது.
இப்போது நீங்கள் உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன். நீங்கள் கோப்பையை மட்டும் வெல்லவில்லை. பெண்கள் கிரிக்கெட்டுக்காக துடிக்கும் ஒவ்வொரு இதயத்தையும் வென்றுள்ளீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.