சதம் விளாசிய சூர்யவன்ஷிக்கு ரூ. 10 லட்சம் பரிசு: பீகார் முதல்-மந்திரி அறிவிப்பு

குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
பாட்னா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 15.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதன் மூலம் குஜராத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றிபெற்றது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசினார். இறுதியில் 38 பந்துகளில் 7 பவுண்டரி, 11 சிக்சர்களுடன் 101 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி அவுட் ஆனார். குறைந்த வயதில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சதம் விளாசிய சூர்யவன்ஷிக்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் விளாசிய பீகாரை சேர்ந்த சூர்யவன்ஷிக்கு வாழ்த்துகள். திறமை, கடின உழைப்பால் அவர் இந்திய கிரிக்கெட்டிற்கு புதிய நம்பிக்கையாக உருவாகியுள்ளார். அனைவரும் பெருமைபடுகிறோம். சூர்யவன்ஷி, அவரது தந்தையை சந்திக்கும் வாய்ப்பு 2024ல் கிடைத்தது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சதம் விளாசியபின் சூர்யவன்ஷியை நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தேன். சூர்யவன்ஷிக்கு மாநில அரசு சார்பில் ரூ., 10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சாதனைகளை படைத்து நாட்டிற்கு சூர்யவன்ஷி பெருமை சேர்க்க விரும்புகிறேன்' என பதிவிட்டுள்ளார்.






