ஆடும் லெவன் அணியில் மாற்றம் செய்யப்போவதில்லை: சூர்யகுமார் யாதவ்

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.
கான்பெர்ரா,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இந்த நிலையில், இந்த தொடர் தொடர்பாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில்,
‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ‘பவர்-பிளே’ (முதல் 6 ஓவர்) மிகவும் முக்கியமானது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டை நீங்கள் பார்த்தால், ஜஸ்பிரித் பும்ரா ‘பவர்-பிளே’யில் குறைந்தது 2 ஓவர் பந்து வீசும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் பவர்-பிளேயில் பந்து வீசுவதற்கு தயாராக இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பவர்-பிளேயில் பந்து வீசுவது நிச்சயம் கடும் சவாலாக இருக்கப்போகிறது.
இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக பும்ரா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இது போன்ற முக்கியமான தொடருக்கு எப்படி தயாராக வேண்டும், இங்கு எந்த வகையில் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது அவருக்கு தெரியும். மற்ற வீரர்களை காட்டிலும் ஆஸ்திரேலியாவுக்கு பும்ரா அதிகமுறை வந்துள்ளார். இதனால் சக வீரர்கள் இங்குள்ள சூழல், ஆடுகளத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் கேட்கிறார்கள். அவரும் அவர்களுக்கு உதவுகிறார். அவரை போன்ற வீரர் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் போது அணியில் இருப்பது நல்ல விஷயம்.
ஆடும் லெவன் அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்போவதில்லை. கடைசியாக நாங்கள் தென்ஆப்பிரிக்க மண்ணில் ஆடிய போது கூட ஒரு வேகப்பந்து வீச்சாளர், ஒரு ஆல்-ரவுண்டர், 3 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றிருந்தனர். இத்தனைக்கும் இங்கு இருப்பது போன்று அதுவும் பவுன்சுக்கு உகந்த ஆடுகளங்கள் தான். ஆசிய கோப்பை கிரிக்கெட்டிலும் இதே போன்ற அணியுடன் தான் விளையாடினோம். அது (3 சுழற்பந்து வீச்சாளர்) தொடரும். வெளிநாட்டு மண்ணில் ஆடுகிறோம். அதனால் வேறு விதமான அணுகுமுறையை கையாள வேண்டும் என்று நினைக்கவில்லை. நாங்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்காக அணியை கட்டமைக்கிறோம்’ என்றார்.






