ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: ‘ஒயிட்வாஷை’ தவிர்க்குமா இந்தியா?

ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் ஆடுகிறது.
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் (இந்திய நேரப்படி) இன்று காலை 9 மணிக்கு (சனிக்கிழமை) நடக்கிறது.
பலமுறை மழை குறுக்கிட்டதால் பெர்த் ஒரு நாள் போட்டி 26 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டது. இதில் இந்தியா 136 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அந்த இலக்கை ஆஸ்திரேலியா 21.1 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. அடிலெய்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்திய அணி ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரது அரைசதத்தால் 264 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோரை ஆஸ்திரேலியா 46.2 ஓவர்களில் போராடி அடைந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூ ஷார்ட்டுக்கு (74 ரன்) இந்திய பீல்டர்கள் இரண்டு முறை எளிதான கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டது பின்னடைவாக அமைந்தது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையே இதுவரை 15 நேரடி ஒருநாள் தொடர்கள் நடந்துள்ளன. இவற்றில் ஒன்றில் கூட இந்தியா தொடரை முழுமையாக தாரைவார்த்ததில்லை. எனவே ஆறுதல் வெற்றி பெற்று அந்த பெருமையை இந்திய அணி தக்கவைத்துக் கொள்ளுமா? என்பதே ரசிகர்களின் பேராவலாகும்.
அதே சமயம் முதல் இரு ஆட்டங்களில் வாகை சூடிய ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 3-0 என்ற கணக்கில் ‘ஒயிட் வாஷ்’ செய்து வரலாறு படைக்க வரிந்து கட்டுகிறது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் (8 மற்றும் 28 ரன்) இன்னும் அதிரடி காட்டவில்லை. அவரும் ரன்வேட்டை நடத்தினால், இந்தியாவின் பாடு திண்டாட்டம் தான். பந்துவீச்சில் ஹேசில்வுட, மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா மிரட்டுகிறார்கள்.

ரோகித் சர்மா - விராட் கோலி
7 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய ரோகித் சர்மா முந்தைய ஆட்டத்தில் 73 ரன்கள் எடுத்து விட்டார். ஆனால் விராட் கோலி இரு ஆட்டங்களில் ரன் ஏதுமின்றி அடங்கினார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் ‘டக்-அவுட்’ ஆனது இதுவே முதல் முறையாகும். இதனால் இப்போது கோலி உச்சக்கட்ட நெருக்கடியில் தவிக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ஜொலித்தால் மட்டுமே அவரால் உலகக் கோப்பையை நோக்கி சிக்கலின்றி பயணிக்க முடியும். அது மட்டுமின்றி ஆஸ்திரேலிய மண்ணில் கோலி, ரோகித் சர்மா விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இது இருக்கலாம் என்பதால் முத்திரை பதிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய கேப்டன் சுப்மன் கில் 10 மற்றும் 9 ரன் வீதம் எடுத்து ஏமாற்றினார். அவரும் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவின் பந்து வீச்சும் மெச்சும்படி இல்லை. வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 2 விக்கெட் எடுத்த போதிலும் 8 ஓவர்களில் 59 ரன்களை வாரி வழங்கினார். அத்துடன் தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் சரியாக ஓட முடியாமல் அவதிப்பட்டார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம் பெற வாய்ப்புள்ளது. இதே போல் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.
சிட்னி மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு எப்போதும் ராசியானது. இங்கு இந்தியாவுக்கு எதிராக 19 ஆட்டங்களில் மோதி அதில் 16-ல் வெற்றி கண்டுள்ளது. 2-ல் மட்டுமே (2008 மற்றும் 2016-ம் ஆண்டு) தோற்றுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் பட்டேல், லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், மேத் ரென்ஷா, அலெக்ஸ் கேரி, கனோலி, மிட்செல் ஓவன், சேவியர் பார்லெட், மிட்செல் ஸ்டார்க் அல்லது ஜேக் எட்வர்ட்ஸ், ஆடம் ஜம்பா, நாதன் எலிஸ் அல்லது ஹேசில்வுட்.






