தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய முன்னணி வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்..?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது.
மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 22-ம் தேதி தொடங்க உள்ளது.
டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தவுடன் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் 30-ம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி முதல் போட்டி 30-ம் தேதியும், 2-வது போட்டி டிசம்பர் 3-ம் தேதியும் , 3-வது மற்றும் கடைசி போட்டி 6-ம் தேதியும் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பங்கேற்பதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்களில் சுப்மன் கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது கழுத்து வலியால் வெளியேறினார். அதன் பிறகு களம் இறங்கவில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் 2-வது டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் அவர் ஒருநாள் தொடரிலும் விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறுபுறம் கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பீல்டிங் செய்கையில் காயமடைந்து ஐ.சி.யூ.-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது வேகமாக குணமடைந்து வருகிறார். இருப்பினும் அவர் முழுமையாக உடற்தகுதி பெற சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தவற விட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முன்னணி வீரரான ஹர்திக் பாண்ட்யா, ஆசிய கோப்பை தொடரில் ஏற்பட்ட தசை பிடிப்பிலிருந்து குணமடைந்து வருவதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவு பணிச்சுமை காரணமாக இந்த ஒருநாள் தொடரில் ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்களில் ஹர்திக் மற்றும் பும்ரா இருவரும் டிசம்பர் 9-ம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் டி20 தொடரில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.






