போட்டி ஒன்று.. சாதனைகள் பல.. வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்


போட்டி ஒன்று.. சாதனைகள் பல.. வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்
x
தினத்தந்தி 29 April 2025 8:39 AM IST (Updated: 29 April 2025 12:55 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்துக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி இந்த சாதனைகளை படைத்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்களும், பட்லர் 50 ரன்களும் அடித்தார்.

பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக 14 வயதான வைபவ் சூர்யவன்ஷியும், யஷஸ்வி ஜெய்வாலும் களமிறங்கினர்.

இதில் அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி வெறும் 35 பந்துகளில் சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 166 ரன்களாக உயர்ந்த போது (11.5 ஓவர்) சூர்யவன்ஷி 101 ரன்களில் (38 பந்து, 7 பவுண்டரி, 11 சிக்சர்) பிரசித் கிருஷ்ணாவின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

முடிவில் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 70 ரன்களுடனும், கேப்டன் ரியான் பராக் 32 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருது வென்றார்.

இந்த ஆட்டத்தில் சதமடித்ததன் மூலம் சூர்யவன்ஷி பல சாதனைகள் படைத்துள்ளார். அவை விவரம் பின்வருமாறு:

1. ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற இமாலய சாதனையை படைத்துள்ளார்.

2. ஐ.பி.எல். தொடரில் ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையில் முரளி விஜய்யுடன் (11 சிக்சர்கள்) முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.

3. ஐ.பி.எல். தொடரில் குறைந்த வயதில் ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

4. ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் (3-வது இன்னிங்ஸ்கள்) சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

1 More update

Next Story