மற்ற அணிகள் உயர்ந்த மட்டத்தில் விளையாடுகின்றன.. ஆனால் நாம்.. - பாக்.முன்னாள் வீரர் வேதனை

image courtesy:PTI
ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் மோசமான தோல்வியை தழுவியது.
கராச்சி,
ஆசிய கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களும், ஷாகீன் ஷா அப்ரிடி 33 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 31 ரன்களில் (13 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில் இப்போதைய பாகிஸ்தான் அணி இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற உலகத்தரம் வாய்ந்த அணிகளுக்கு நிகராக இல்லை என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இது எல்லா வகையிலும் ஏமாற்றமளிக்கும் செயல்திறனாக இருந்தது. சைம் அயூப் பந்துவீச்சாளர்களில் சிறந்தவராக இருந்தார் என்று நினைக்கிறேன். இறுதியாக, 35 வயதில், நமக்கு (பாகிஸ்தான்) ஒரு உண்மையான சுழற்பந்து வீச்சாளர் கிடைத்திருப்பதாகத் தோன்றுகிறது. நிச்சயமாக, பாகிஸ்தான் விளையாடும் கிரிக்கெட்டின் தரத்திற்கு உலகின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில் பெரிய வித்தியாசம் இருப்பதை நாம் புரிந்து கொண்டோம். பெரும்பாலான மற்ற அணிகள் உயர்ந்த மட்டத்தில் கிரிக்கெட் விளையாடுகின்றன. ஆனால் நாம் கிளப் மட்டத்தில் விளையாடுகிறோம்.
நமது பேட்டிங் தரம் முழுமையாக வெளிப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தனது இஷ்டத்திற்கு ஸ்வீப் மற்றும் கட் ஷாட்களை விளையாடி, நமது பந்துவீச்சாளர்களை தனது வழியில் ஆட்டிப்படைத்தார். நீங்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகவும் சவாலானது என்று சொன்னால், பின்னர் எப்படி ஷாகின் அப்ரிடி 16 பந்துகளில் ஒரு சில சிக்சர்களுடன் 33 ரன்கள் அடித்தார்?. நமக்கு தரம் இல்லை. நாம் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா போன்ற அணிகளுடன் போட்டியிடக்கூடிய அணி இல்லை. நாம் அசோசியேட் உறுப்பினர் அணிகளை விட சற்று மேல் மட்டத்தில் இருக்கிறோம் அவ்வளவுதான்” என்று கூறினார்.






