இந்திய அணியினருடன் அதை செய்யாமல் இருந்தாலே பாகிஸ்தான் வெற்றி பெறும் - மொயீன் கான் அட்வைஸ்

இந்தியாவுக்கு எதிரான தோல்விகளுக்கு அவர்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஆற்றும் நட்பே காரணம் என்று மொயீன் கான் தெரிவித்துள்ளார்.
லாகூர்,
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் பெரும்பாலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இம்முறையும் இந்திய அணியே வெற்றி பெறும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக சமீப கால தோல்விகளுக்கு அவர்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஆற்றும் நட்பே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் மொயீன் கான் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதுவே கடைசியில் பாகிஸ்தான் அணிக்கு பலவீனமாக அமைந்து தோல்வியை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே நீங்கள் வெற்றி பெற இந்திய அணியினருடன் நட்பை ஆற்றாமல் விளையாடுங்கள் என்று அவர் பாகிஸ்தானுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.
இது பற்றி மொயீன் கான் பேசியது பின்வருமாறு:- "இப்போதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் மோதல்களை என்னால் பார்க்க முடியவில்லை. இப்போதெல்லாம் இந்திய வீரர்கள் களத்திற்கு வந்ததும் பாகிஸ்தான் வீரர்கள் அவர்களுடைய பேட்டை பார்த்து, அவர்களுடைய தோளில் தட்டிக் கொடுத்து, நட்பாக பேசுகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்தியாவுக்கு எதிராக விளையாடும் நமது வீரர்களின் செய்கைகள் என்னால் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. களத்திற்கு வெளியேயும் நீங்கள் சில கட்டுப்பாடுகளை கொண்டிருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது அவர்களிடம் கொஞ்சம் கூட பேச்சுக் கொடுக்காமல் களத்தில் அதிரடியாக விளையாட வேண்டும் என்று எங்கள் மூத்த வீரர்கள் எங்களிடம் சொல்வார்கள். ஆனால் தற்போது நீங்கள் நட்பாக பேசும்போது அது பலவீனமாக இருப்பதற்கான அறிகுறியாக தெரிகிறது. இருப்பினும் இதை நம்மளுடைய வீரர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் களத்தில் நட்பாக செயல்படுவது உங்களுடைய பலவீனத்தை வெளிப்படுத்துவதற்கான அறிகுறி. அது தாமாக உங்களுடைய செயல்பாடுகளில் அழுத்தத்தை உண்டாக்கும்" என்று கூறினார்.






