வீரர்களை குறை சொல்ல கூடாது - கம்பீரின் கருத்தை சாடிய ரகானே

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைய இந்திய பேட்ஸ்மேன்களே காரணம் என்று கம்பீர் கூறியிருந்தார்.
மும்பை,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. ஆடுகளம் (பிட்ச்) முழுமையாக சுழலுக்கு உகந்ததாக மாறியதால் இந்திய பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை.
ஆனால் தாங்கள்தான் இத்தகைய ஆடுகளத்தை கேட்டு பெற்றோம். பேட்ஸ்மேன்கள் சொதப்பி விட்டனர் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறினார். இதையடுத்து கம்பீரின் தவறான அணுகுமுறையே தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் அமைக்கப்படுவதில்லை என்று இந்திய முன்னணி வீரர் ரகானே தெரிவித்துள்ளார். அதனால் பயிற்சியில் கூட அப்படிப்பட்ட பிட்ச்சில் பயிற்சிகளை எடுக்காத இந்திய வீரர்களை தோல்விக்கு காரணமாக சொல்லாதீர்கள் என்று கம்பீரை அவர் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “டெஸ்ட் போட்டிகளில் நாம் சுழலுக்கு சாதகமான பிட்ச்களை உருவாக்குகிறோம். உங்களிடம் தரமான ஸ்பின்னர்கள் இருந்தால் நீங்கள் அதை செய்யலாம். ஆனால் அதில் பந்து எப்போது சுழல தொடங்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை முதல் நாளிலேயே பந்து சுழலுவதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், உள்நாட்டு கிரிக்கெட்டிலும் அதே மாதிரியான பிட்ச்கள் இருக்க வேண்டும்.
ஏனெனில் உங்கள் வீரர்கள் அத்தகைய பிட்ச்களில் விளையாடப் போகிறார்கள் என்றால், அதே அனுபவம் அவர்களுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டிலும் கிடைக்க வேண்டும். உள்நாட்டில் நாம் பொதுவாக பிளாட் அல்லது வேக பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் விளையாடுகிறோம். ஆனால் அது பொதுவாக 3-வது நாளிலிருந்துதான் தொடங்கும். முதல் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்ய சிறந்ததாக இருக்கும்.
சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் விளையாட நீங்கள் வித்தியாசமாக தயாராக வேண்டும். இங்கே வீரர்களை நாம் குறை சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். அவர்கள் இப்படிப் பட்ட பிட்ச்களில் விளையாடியதில்லை. பயிற்சியின்போது கூட அவர்கள் அத்தகைய பிட்ச்களில் பயிற்சி எடுப்பதில்லை” என்று கூறினார்.






