ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு -உத்தரபிரதேசம் ஆட்டம் ‘டிரா’

தமிழக அணி 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.
கோவை,
91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு-உத்தரபிரதேசம் (ஏ பிரிவு) அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த தமிழக அணி 455 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய உத்தரபிரதேசம் 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. ரிங்கு சிங் 98 ரன்னுடன் களத்தில் இருந்தார். இந்த நிலையில்4-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ரிங்கு சிங் முதல்தர கிரிக்கெட்டில் 9-வது சதத்தை அடித்ததுடன், 176 ரன்கள் சேர்த்து அசத்தினார். முதல்தர கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
முடிவில் உத்தரபிரதேச அணி 460 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தமிழக அணி தரப்பில் வித்யுத் 4 விக்கெட்டும், கேப்டன் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், சரவணகுமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
5 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் உத்தரபிரதேசம் 3 புள்ளியை பெற்றது. தமிழக அணிக்கு ஒரு புள்ளி கிட்டியது.






