ரஞ்சி கிரிக்கெட்: உத்தரபிரதேச அணி 339 ரன் சேர்ப்பு

உத்தரபிரதேச அணி 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது.
கோவை,
91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) தமிழ்நாடு- உத்தரபிரதேசம் அணிகள் சந்தித்தன. இதில் முதலில் ஆடிய தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவித்தது. பாபா இந்திரஜித் (149 ரன்), ஆந்த்ரே சித்தார்த் (121 ரன்) சதம் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய உத்தரபிரதேசம் 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட் செய்த அபிஷேக் கோஸ்வாமி 79 ரன்னிலும், ஆர்யன் ஜூயல் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் கரண் ஷர்மா (11 ரன்), ஆரத்யா யாதவ் (4 ரன்) நிலைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஷிவம் மாவி, ரிங்கு சிங்குடன் இணைந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷிவம் மாவி 53 ரன்னில் சரவணகுமார் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜெகதீசனிடம் சிக்கினார்.
ஆட்ட நேரம் முடிவில் உத்தரபிரதேச அணி 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. ரிங்கு சிங் 98 ரன்களுடனும் (157 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), ஷிவம் ஷர்மா 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தமிழக அணி தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் வித்யுத் 3 விக்கெட்டும், சரவணகுமார் 2 விக்கெட்டும், கேப்டன் சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.






