ரஞ்சி கோப்பை: முதல் இன்னிங்சில் தமிழக அணி 455 ரன்கள் குவிப்பு

image courtesy:twitter/@TNCACricket
தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 149 ரன்கள் குவித்தார்.
கோவை,
91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
அதன்படி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர்.கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் (ஏ பிரிவு) தமிழ்நாடு - உத்தரபிரதேசம் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழக அணி தொடக்க கட்டத்தில் கேப்டன் ஜெகதீசன் (8 ரன்), பிரதோஷ் ரஞ்சன் பால் (2 ரன்) உள்பட 4 பேரின் விக்கெட்டுகளை 71 ரன்னுக்குள் இழந்து தடுமாறியது. இந்த இக்கட்டான சூழலில் 5-வது விக்கெட்டுக்கு, ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித்தும், ஆந்த்ரே சித்தார்த்தும் அணியை காப்பாற்றினர். அணியை சிக்கலில் இருந்து மீட்ட இவர்கள் சதம் அடித்து அசத்தினர்.
முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 81.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 282 ரன்கள் அடித்திருந்தது. பாபா இந்திரஜித் 128 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆந்த்ரே சித்தார்த் 121 ரன்களில் கேட்ச் ஆனார்.
இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பாபா இந்திரஜித் 149 ரன்களும், அஜிதேஷ் குருசாமி 86 ரன்களும், சோனு யாதவ் 44 ரன்களும் அடித்து அணிக்கு வலு சேர்த்தனர். உத்தரபிரதேச அணி தரப்பில் கார்த்திக் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய உத்தரபிரதேச அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன அபிஷேக் கோஸ்வாமி - மாதவ் கவுஷிக் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மாதவ் கவுஷிக் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
2-வது நாள் ஆட்ட நேர முடிவில் உத்தரபிரதேச அணி 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 87 ரன்கள் அடித்துள்ளது. அபிஷேக் 54 ரன்களுடனும், ஆர்யன் ஜுயல் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் ஒரு விக்கெட் வீழ்த்தி உள்ளார். உத்தரபிரதேச அணி இன்னும் 368 ரன்கள் பின்தங்கி உள்ளது.
நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.






