ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு..? ரசிகர்கள் அதிர்ச்சி


ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு..? ரசிகர்கள் அதிர்ச்சி
x

image courtesy:PTI

தினத்தந்தி 10 Jun 2025 3:33 PM IST (Updated: 10 Jun 2025 3:45 PM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். 2025 தொடரில் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது.

பெங்களூரு,

அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.

ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்தே ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதல் 17 ஆண்டுகள் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. இதனால் அந்த அணி பல விமர்சங்களை எதிர்கொண்டது. இருப்பினும் அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே சென்றதே தவிர குறையவில்லை.

இந்நிலையில் அந்த அணியின் 18 ஆண்டு கால ஏக்கம் இந்த ஐ.பி.எல். சீசனோடு தணிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியை அணியின் வீரர்கள் மட்டுமின்றி பல ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடி தீர்த்தனர்.

இருப்பினும் ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் ஆர்சிபி அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்க அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் வெற்றி, பிராண்ட் மதிப்பு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அணியின் உரிமையாளரான டயாஜியோ பிஎல்சி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் உரிமையை விற்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டயாஜியோ நிர்வாகம் ஆர்சிபி அணியின் முழு அல்லது பகுதி உரிமையை விற்க திட்டமிடுவதாகவும், இதற்கு 2 பில்லியன் டாலர் வரையில் (இந்திய மதிப்பில் ரூ.16,834 கோடி) மதிப்பீட்டை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

இது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story